காலச் சக்கரம்
வெளியீடு : வானதி பதிப்பகம்
ஆசிரியர் : நரசிம்மா
விறுவிறுப்பான கதை, அதில் மர்மங்களும் அரசியலும் இருப்பதை விரும்பும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கான புத்தகம் தான் இது!
வடகோட்டில் இருக்கும் ஒரு அரசியல் வாரிசின் குடும்பத்தில் நிகழும் மர்மங்களுக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு ஆச்சாரமான குடும்பத்திற்கும் என்ன தொடர்பு? இதை முழுமையாக பேசியிருக்கிறார் கதையின் ஆசிரியர். காஷ்மீரில் தொடங்கும் கதை, காசியில் முடிகிறது. கதையில் மர்மங்களுக்கும், மாந்திரீகங்களுக்கும், விறுவிறுப்புக்கும் கொஞ்சமும் பஞ்சம் இருக்காது.
கதை பல்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் எ.கா.: 1940கள் முதல் 1980வரை காலங்கள் முன்-பின்னாக அத்தியாயங்களில் வரும். இதில் வாசகர்களுக்கு எந்த குழப்பமும் வராதபடி ஆசிரியர் அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
கதையின் முதற்பாதியில் போடப்படும் எண்ணற்ற மர்ம முடிச்சுகள் கதையின் பிற்பாதியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும். அந்த இடமானது வாசகர்களை நகம் கடிக்க வைக்கிறது.
புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் 'இக்கதை ஒரு அரசியல் கிசுகிசுவை மையமாக கொண்டது' என குறிப்பிட்டுள்ளார். அதன்படியே உங்களுக்கும் இதை படிக்கும்பொழுது கடந்தகால அரசியல் நிழலாடும். இந்த இடத்தில் நான் தனிப்பட்ட முறையில் சில விடயங்களில் மாறுபடுகிறேன் (குறிப்பாக நிகழ்வுக்கு காரணம் என குறிப்பிடப்படும் செயலில்) , எனினும் புத்தகம் நிச்சயம் விருந்தாக இருக்கும்.
இது ஆசிரியரின் முதல் புத்தகம் என்றே நம்பமுடியாதபடி எழுதியுள்ளார். இவரின் அனைத்து நூல்களும் இவ்வாறே விறுவிறுப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இவரின் மற்ற நூல்களை பற்றி வரும் நாட்களில் எழுதுகிறேன்.
பி.கு.
இந்த புத்தகம் எனக்கு என்னுடைய பள்ளி ஆசிரியரால் (திரு. ஜெயராம்) அன்பளிப்பாக வழங்க பட்டது என்பது கூடுதல் மகிழ்ச்சி. தற்செயலாக அவரை புத்தக திருவிழாவில் வெகு காலம் சென்று சந்தித்தேன், என் பரிசு என்று இதனை அளித்தார்.
தினேஷ்
திருவள்ளுவர் ஆண்டு 2051 ஆடி 19
08-03-2020
Comments
Post a Comment