சில நேரங்களில் சில மனிதர்கள்!
ஆசிரியர்: ஜெயகாந்தன்
வெளியீடு: மீனாட்சி புத்தக நிலையம்
எழுத்துலகின் பீஷ்மன் என்று புகழப்படும் ஜெயகாந்தனால் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது இந்த கதை. ஜெயகாந்தன் எழுதிய 'அக்னி பிரவேசம்' என்ற சர்ச்சைக்குரிய சிறுகதையை மையமாக வைத்து எழுதப்பட்டதே இந்த நெடுங்கதை. சில நேரங்களில் சில மனிதர்கள் கதயை பார்க்கும் முன், அக்னி பிரவேசம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
அக்னி பிரவேசம் கதையின் சுருக்கம் இதுவே: கல்லூரிக்கு முதல் நாள் செல்லும் பாரம்பரிய பிராமண குடும்பத்தை சார்த்த இளம் பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் முன்பின் அறிமுகம் இல்லாத மூன்றாம் நபருடன் காரில் வீடு திரும்ப நேரிடுகிறது. தனிமையை பயன்படுத்திக்கொள்ளும் அந்த வாலிபர், பெண்ணை தன் இச்சைக்கு பயன்படுத்திவிட்ட பிறகு வீட்டில் விட்டு செல்கிறார். நடந்தவற்றை தாயிடம் சொல்கிறாள் மகள். கைம்பெண்ணான தாய் இந்த விடயத்தை மகனுக்கு கூட சொல்லாமல், பெண்ணை மாற்றானுக்கு மணம்முடிப்பதாக கதை முடிகிறது.
இன்றைய காலகட்டத்திற்கு இது சாதாரணமாக, முற்போக்காக தெரியலாம். ஆனால் அன்றைய காலத்தில் இது கடும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக எழுதப்பட்டதே சில நேரங்களில் சில மனிதர்கள். தினமணியில் தொடராக வந்து, பின் நாவலாக வெளிவந்தது. இந்த படைப்புக்காக JKவிற்கு இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயரிய விருதான 'சாகித்ய அகாடமி' விருது வழங்கப்பட்டது.
இப்பொழுது இந்த புத்தகத்தினுள் செல்வோம்..
கதை, மேற்சொன்ன களத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு வேறுபாடு, இங்கு தாய் நடந்தவற்றை மறைக்காமல் வெளி உலகுக்கு சொல்கிறாள். ஆகையால், மகள் படும் துயரம், அவமானமே கதையின் மைய கரு.
ஊராரின் பேச்சால் தாய் மகளை (கங்கா), தன் ஒன்று விட்ட சகோதரர் வீட்டில் இருந்து படிக்குமாறு அனுப்புகிறார். அவர் ஊர் போற்றும் பெயர்போன வழக்குரைஞர். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகி குழந்தை இல்லாதவர். மூடநம்பிக்கைக்குள் மூழ்கிக்கிடப்பவர். ஆதலால், தங்கையின் மகளுக்கு திருமணம் நடைபெறாது (நடைபெறக்கூடாது) என்று கூறுபவர். அவர் அவ்வாறு கூற காரணம், தன் இச்சைக்கு அவளை பயன்படுத்தலாம் என்ற எண்ணத்திலே தான்.
கங்காவும் திருமணம் செய்யாமல் தாயுடன் வசித்துவருகிறாள். நடந்த சம்பவத்திற்கு பிறகு யாருடனும் அவள் பேசுவதில்லை, சுக போகங்கள் ஏதும் இல்லாமல் துறவு வாழ்வு வாழ்ந்து வருகிறாள். இதற்கிடையில் மாமாவின் செய்கைகள் எல்லை மீறவே, அவள் ஒரு முடிவெடுத்தாள்.
தன் இப்போதைய நிலைக்கு காரணம், அன்று தவறாக நடந்து கொண்ட இளைஞன். ஆகவே அவனை தேடி பிடித்து திருமணம் செய்ய வேண்டும், அப்பொழுதுதான் சமுதாயத்திடமும், மாமாவிடமும் மானதுடன் வாழ முடியும் என்று முடிவெடுத்து அவனை தேடி அலைகிறாள்.
பல நாள் தேடலுக்கு பிறகு, அவனை (பிரபு) அடையாளம் காணுகிறாள். அவனும் நடந்த நிகழ்வுகளுக்கு வருந்துகிறான், வயது வேகத்தில் செய்து விட்டேன் என்று மன்னிப்பு கோருகிறான். இவளிடம் அன்பாக, பிரியமுடன் பழகுகிறான். இதற்கிடையில் இவர்களின் பழக்கம் பிடிக்காமல் தாய், மகன் (கணேசன்) வீட்டுக்கு சென்று விடுகிறாள்.
பிரபு வசதியானவன். ஆனால் குடி, சூது பழக்கமுடையவன். ஆகையால் மனைவியிடம் மரியாதையை இல்லை. இது கங்கா-பிரபு இடையே நல்லதொரு நட்பை வளர்கிறது.
பிரபு, கங்கா திருமணம் செய்து கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறான். கங்காவோ பிரபுவை ஒரு பொறுப்புள்ள மனிதனாக மாற்ற முற்படுகிறாள். அதன் பின் நடந்தவையே கதையின் முடிவு. கதையின் முடிவை சற்றும் எதிர்பாராத வண்ணம் அமைத்துள்ளார் JK. கதையின் முடிவு தலைப்பை மீண்டும் ஒரு முறை வாசகர்களை முணுமுணுக்க வைக்கிறது. அதுதான் JK.
தன்னுடைய சிறுகதையில் எழுதிய முடிவின் நேர்மாறாக இந்த நெடுங்கதையின் தொடக்கத்தை வைத்தார் ஜெயகாந்தன். கங்கா படும் அவமானங்களையும், சோதனைகளையும் ஆழமாக பதிவு செய்கிறார். இதன் மூலம் தன் சிறுகதை முடிவே சிறந்தது என்று நிறுவுகிறார்.
சமுதாயத்தில் இருக்கும் கடுமையான பழமைவாதத்தை எதிர்த்து ஒரு படைப்பாளியின் செயல்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்று தன் சந்ததியினருக்கு வழிகாட்டுகிறார். அவர் காட்டிய வழியே சரி என்று சமூகம் பின்னாளில் ஏற்றுக்கொண்டது. அந்த வகையில் JK ஒரு தீர்க்கதரிசி.
அனைவரும் அவசியம் ஒரு முறை வாசிக்கவேண்டிய படைப்பு!!
அனைவரும் அவசியம் ஒரு முறை வாசிக்கவேண்டிய படைப்பு!!
~தினேஷ்
26.04.2020
திருவள்ளுவர் ஆண்டு 2051 சித்திரை 13
Comments
Post a Comment