கல்கியின் 'பொன்னியின் செல்வன்' பாதையில் இரண்டாம் நாள். முந்தைய பதிவை இங்கே படிக்கவும்
நாள் -2
இன்று முழுவதும் சோழர்கள் தங்களின் கலை என்னும் அஸ்திரம் கொண்டு மூர்ச்சை அடைய செய்யப்போகிறார்கள் என்பதால் கதிரவன் தனது கதிர்களை பாய்ச்சும் முன்னே தாக்குதலை எதிர்கொள்ள தயாராகினேன்.
பொன்னியின் செல்வன் கதையில் மிக முக்கியமான கதாபாத்திரமான 'சேத்தன் அமுதனின்' தோட்டத்தை தான் முதலில் பார்க்கப்போனோம். அதை தேடி வெகுதூரம் அழைய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காரணம் நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு மிக அருகே அந்த வரலாற்று இடம் அமைந்திருந்தது.
சேத்தன் அமுதன் இந்த இடத்தில் தான், தனது தாயுடன் பூந்தோட்டம் அமைத்து சிவனுக்கு கைங்கரியம் செய்துவந்தான். வந்தியத்தேவன் சேத்தனை தஞ்சை அரண்மனை வாயிலில் செம்படை வீரர்கள் அணிவகுப்பின்பொழுது சந்தித்தான். (இந்த செம்படையை மையமாக வைத்தே 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவன் செம்படை சோழர்களுக்கு உதவுவதை போல் கதை வைத்தார்). இந்த சேத்தன் அமுதன் தான் பின்னாளில் உத்தம (எ) மதுராந்தக சோழனாக அரியணையில் அமர்ந்தான்.
அத்தோட்டம் தற்பொழுது சிவன் திருக்கோவிலாக காட்சியளித்தது. அதிகாலையிலேயே சென்றதால் கோவில் நடைகூட திறந்திருக்கவில்லை.அதன் வரலாற்று பெருமைகள் ஏதுமற்று குடியிருப்புகளுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தது. நாங்கள் புகைப்படம் எடுப்பதையே ஆச்சரியமாக அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.
அப்பகுதி மக்களிடம் விசாரித்ததில் கோவில் நடை 7 மணிக்கு மேல்தான் திறப்பார்கள் என தெரிந்தது. வெளியில் இருந்தே கும்பிடுபோட்டு பயணத்தை தொடர்ந்தோம்.
செல்லும் வழியில் சாலையின் இருபக்கக்கிலும் பச்சை கம்பளம் விரித்தாற்போல் வயல்வெளி பறந்து விரிந்து, தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் நாங்கள்தான் என்பதை பறைசாற்றின. சாலையில் ஊர்ந்து சென்ற மாட்டு வண்டிகளும், ட்ராக்டர்களும் அறுவடை காலம் நெருங்கியது என்பதற்கு கட்டியம் கூறின.
உடன்வந்த நண்பன் போகும்வழியில் தான் சுவாமிமலை உள்ளது, அங்கும் சென்று திரும்புவோம் என்றான். நானும் இதுவரை சுவாமிமலை சென்றதில்லை என்பதால், அந்த பாதைக்கு வண்டியை திருப்பினோம். இதுதான் சுவாமிமலை என்றெண்ணி ஒரு பழமையான கோவிலின் முன் வண்டியை ஓரம்கட்டினோம். கோவில் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் பாட்டியை விட்டால் வேறுஒருவரும் இல்லை. இதுவா சுவாமிமலை என்ற யோசனையிலேயே கோவிலின் வாசலை அடைந்தபொழுதுதான் தெரிந்தது அது சுவாமிமலை இல்லை 'ஸ்ரீ கபர்தீஸ்வர சுவாமி திருக்கோவில்' என்று. சரி வந்ததிற்கு சாமியை தரிசித்துவிட்டு செல்வோம் என்று உள்ளே சென்றோம்.
இவ்வளவு பழமையான, பிரமாண்டமான கோவில் ஆள் அரவமற்று கிடப்பதை நான் அதுவரை கண்டதில்லை. கோவிலின் உள்ளே சென்று வெளியே திரும்பும்வரை நான்கைந்து நபர்களை தவிர வேறு எவரும் கண்ணுக்குப் படவில்லை. நிச்சயம் அதன் பிரமாண்டமும், கட்டிட கலையும் உங்களை வாய்ப்பிளக்கவைக்கும். அறநிலைய துறை அவசியம் இந்த ஆலயத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சில நாழிகைகள் கோவிலை சுற்றிபார்த்துவிட்டு, சுவாமிமலை சென்று தரிசனத்தை முடித்துவிட்டு நேராக ராஜேந்திர சோழனின் பிரமாண்டமான படைப்பான கங்கைகொண்ட சோழபுரம் சென்றோம். வரலாற்று சிறப்புமிகுந்த இடம் என்பதால் அதற்கே உண்டான வழக்கமான கம்பிவேலிகளும், எச்சரிக்கை பதாகைகளும் எங்களை வரவேற்றன. முந்தைய நாள் பெரிய கோவிலில் இருந்ததை போலவே இங்கேயும் கணிசமான மக்கள் கூட்டம் இருந்தது.
நீல வான பின்னணியில் ராஜகோபுரத்தை பார்த்த அனுபவம், எழுத்துக்களால்தான் விவரிக்க முடியுமா? அல்லது அங்கிருக்கும் கற்களிடம் காதை கொடுத்தால் நிசப்த மொழியில் அவை பேசும் ஆயிரமாண்டு சரித்திரத்தைத்தான் எழுத்துக்களில் வடிக்கமுடியுமா?
அந்த பிரமாண்ட படைப்பை அனைவரும் அவசியம் நேரில் ஒருமுறை சென்று பார்த்தாகவேண்டும். ஆனால் ஒன்று, நம் மக்களுக்கு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க போதிய விழிப்புணர்வும் இல்லை, அதை கையாளும் பொறுப்புணர்வும் இல்லை. அந்த வரலாற்று சின்னம் போதிய விழிப்புணர்வு இல்லாத மக்களால் தனது பொழிவை இழக்குமோ என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.
coming back to the point...
ராஜேந்திர சோழனின் கலை பிரமாண்டத்தை பார்த்தபடி புல்வெளியில் நெடுநேரம் அமர்ந்திருந்த பொழுதுதான், திடீரென்று அந்த ஞாபகம் வந்தது. இங்கேதானே ராஜேந்திர சோழன் கட்டிய அரண்மனையின் மிச்சங்கள் இருக்கின்றது? உடனடியாக சுறுசுறுப்படைந்து மாளிகை இருந்த இடத்தை தேட அரமித்தோம்.
சரியாக இரண்டு கி.மீ. தாண்டி 'மாளிகை மேடு' என்ற இடத்தில் இருப்பதை அறிந்து வண்டியை மாளிகை மேடு நோக்கி விரட்டினோம். ஆள் அரவமற்று, போகும் வழியெங்கும் புதர் மண்டி கிடந்த ஒரு மண் சாலையில் பயணித்த பிறகு தொல்லியல் துறையின் சிறு அறிவிப்பு பலகை இடத்தை அடையாளம் காட்டியது.
ராஜேந்திர சோழன் வடக்கே 'பாலர்களை' கங்கை நதிக்கரையில் வெற்றிகொண்டதன் நினைவாக எழுப்பியதே இந்நகரம். ராஜேந்திர சோழன் காலத்தில் பரந்து விரிந்திருந்த சோழர்களின் நிலப்பரப்பை ஆளும் வண்ணம் இந்நகரை அவன் நிர்மாணித்திருந்தான். இன்று அரண்மனையில் இருந்த சிதிலமடைந்த சில பகுதிகளை தவிர பெரிதாய் அங்கு ஒன்றும் இல்லை. சமீபத்தில் 2ம் கட்ட அகழ்வாய்வின்போது மேலும் சில பகுதிகளை கண்டுபிடித்ததாய் செய்திகளின் வாயிலாக அறிந்தேன், நன்று!
ராஜேந்திர சோழனின் படைப்புக்களை பார்த்துவிட்டு நேராக அவனின் பெரியப்பாவான ஆதித்ய கரிகாலனின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட இடமும், சோழ வரலாற்றில் பல திருப்பங்களின் நிகழ்விடமான 'கடம்பூர்' மாளிகை நோக்கி புலி பாய்ச்சலில் சென்றோம்..!
-தொடரும்
தினேஷ்
திருவள்ளுவர் ஆண்டு 2052 ஆனி 13
Comments
Post a Comment