கல்கியின் எழுத்துக்களில் 'பொன்னியின் செல்வன்' படித்த அனைவரது கனவும், நிச்சயம் ஒரு முறையேனும் வந்தியத்தேவனின் பாதையில் நாமும் பயணிக்க வேண்டும் என்பதே. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. எனக்குள்ளும், நெடு நாளாய் கனன்று கொண்டிருந்த ஆசை சமீபத்தில் தான் நிறைவேறியது. நாங்கள் மூவர் ஒரு குழுவாக கடந்த வருட இறுதியில் மேற்கொண்ட பயணம் இது. முழுமையான பாதையை தொட்டோமா என்றால், இல்லை. குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய மிக சில இடங்கள், ஆனால் முக்கியமான இடங்கள்.
இது முழுக்க முழுக்க பொன்னியின் செல்வன் பயணம் தானா என்றால் அதற்கும் பதில் இல்லைதான். வேறு சில இடங்களையும் பார்த்தோம். அதை பற்றியும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.
இந்த பயணம் மொத்தம் மூன்று நாட்கள் - மூன்று பகல், இரண்டு இரவு.
பொன்னியின் செல்வன் கதை சுருக்கம்:
தந்தை சுந்தர சோழர் தஞ்சை அரண்மனை யில் உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்து வடக்கே காஞ்சியில் பகைவர் படை எடுக்காமல் காவல் காத்து வரும் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் தான் கட்டிய பொன் மாளிகையில் தம் பெற்றோரை அழைத்து தங்க சொல்வதற்கு தம் சிநேகிதன் வந்தியத்தேவன் மூலம் தந்தைக்கு தூது அனுப்புகிறான்… வழியில் சோழ பாதுகாவலர் பெரிய பழுவேட்டரையர் தம் ஸ்நேகித சிற்றரரசர்களுடன் சோழ ராஜ்யம் திற்கு தம் மருமகன் உறவு கொண்ட மதுராந்தகனுக்கு பட்டம் கட்டுவது பற்றி ரகசிய உடன்படிக்கை செய்வது தெரிந்து கொள்கிறான்…மற்றும் தான் கொண்டுவந்த ஓலையை தஞ்சை சென்று சோழ சக்கரவர்த்தியிடம் ரகசியமாக சொல்லும் பொருட்டு காவல்களை தந்திரமாக கையாண்டு மன்னரிடம் கொடுக்கிறான். அதனால் கோட்டை தளபதியின் கோவத்திற்கு ஆளாகிறான்.. மேலும் சக்கரவர்த்தி திருமகள் குந்தவையை சந்தித்து குறுமன்னர்கள் போட்ட ரகசிய பேச்சுவார்த்தை பற்றி கூறுகிறான்.. ஆபத்தை உணர்ந்த குந்தவை இலங்கையில் இருக்கும் தம்பியான அருள் மொழி வர்மனை கொண்டு வரும்படி வந்தியத்தேவனுக்கு அவன் மேல் கொண்ட நன்மதிப்பால் ஓலை அனுப்புகிறாள்…வந்தியத்தேவனும் பல இடையூறுக்கிடையே இலங்கையில் ராஜ ரஜனை கண்டு அவரிடம் குந்தவை கொடுத்த ஓலை கொடுத்து அவரை தஞ்சை கொண்டுவர முயற்சிக்கிறார்.. வரும் வழியிலும் பல இன்னல் களை சந்தித்து கோடியக்கரை வருகிறார்கள்.. அச்சமயம் அருள் மொழிக்கு குளிர் சுரம் வந்து விடவே அவரை நாகைக்கு அழைத்து சென்று வைத்தியம் பார்க்கிறார்கள்.. குந்தவையும் நடந்ததை கேள்வி பட்டு சோழ நாட்டில் நடக்கும் உட்கட்சி பூசலினால் அருள் மொழியை தலை மறைவாக இருக்க சொல்கிறார்.. இதற்கிடையே வீர பாண்டியன் கொலைக்கு பழி வாங்க ஆதித்த கரிகாலனை சிற்றரசர்கள் முன்னாள் இரகசிய பேச்சு நடந்த சம்புவரையர் அரண்மனைக்கு அவர் கல்யாணம் விஷயமாக பேச்சு நடத்த அவர் முன்னாள் காதலி நந்தினி அழைப்பு விடுகிறாள்… இதை கேள்வி பட்ட குந்தவை வந்தியத்தேவனை கரிகாலனுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு கடம்பூர் அரண்மனைக்கு அனுப்புகிறார்.. சென்ற இடத்தில் கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்பட்ட பழி வந்தியத்தேவன் மீது வருகிறது… இச்சமயம் ஒரு புயலால் அருள் மொழி வர்மன் வெளிபட மக்கள் அவரை கண்டு கொண்டு நாகை யிலிருந்து தஞ்சைக்கு ஊர்வலமாக யானை மேல் அழைத்து வருகிறார்கள்.. பிறகு பல்வேறு தடைகளுக்கு அப்பால் வந்தியத்தேவனை கொலை பழியில் இருந்து காப்பாற்ற அருள் மொழி வர்மன் பட்டம் சூட சம்மதம் தெரிவிக்கிறார்.. கடைசியில் மகுடம் யாருக்கு சூட்ட படுகிறது? … நந்தினி யார்? ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? பழுவேட்டரையர் மருமகன் மதுராந்தகன் யார்? என்பது வாசகர்கள் படிக்க தெரிந்து கொள்ளும் அனுபவம் ஆக இருக்கட்டும்…
நாம் இங்கு இப்படி சுருக்கமாக சொல்வதை விட அமரர் கல்கி யின் ரசனை மிகுந்த எழுத்துக்கள் மூலம் அறிவது அந்த உலகத்துக்கே நாம் செல்லும் அனுபவம் ஏற்படும்..
(நன்றி: தமிழ் Quora)
முக்கிய குறிப்பு:
இந்த தொடரில் வரும் பெரும்பாலான இடங்கள் கோவில்களாகத்தான் இருக்கும். 25 வயதில் கோவில் குளம் என்று சுற்றுகிறாயே என பலர் என் பெற்றோரை போல் நினைக்கலாம். அவர்களுக்கு என் பதில், நீங்கள் கோவிலை வழிபாட்டு தலமாக பார்க்குறீர்கள்; நான் அதை வரலாற்று சின்னமாக பார்க்கிறேன்.
நான் இந்த பயணத்தில் கோவிலுக்கு செல்ல காரணம் சரித்திர ஆசையால் மட்டுமே, புண்ணியத்திற்கோ, பக்திக்கோ அல்ல.
நாள்-1
திருப்பூரிலிருந்து காலை 7 மணி அளவில் புறப்பட்டு முதலில் திருச்சி ஸ்ரீ ரங்கம் சென்றோம். மணி 11 இருக்கும். ஸ்ரீ ரங்கத்தின் கட்டிட கலை மற்றும் வரலாற்று பகுதிகளை பார்த்தோம். ராமானுஜர் பூத உடல் என்று நம்பப்படும் வசந்த மண்டபத்தையும் கண்டோம். சிலர் அது சிலை தான் என்றும், வேறு சிலர் அது ராமானுஜரின் பத படுத்தப்பட்ட உடல் என்றும் நம்புகின்றனர். நாம் அதை விட்டுவிட்டு பயணத்திற்கு வருவோம்.
ஸ்ரீ ரங்கத்திற்கு செல்ல இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று செல்லும் வழியில் என்பதால். இரண்டாவது எனக்கு ஸ்ரீரங்கத்தின் மீது எதோ ஒரு பிடிப்பு. அங்கு சென்றால் ஒரு விதமான positive vibe கிடைப்பதாக உணர்கிறேன். பக்தியா என்றால், சொல்ல தெரியவில்லை!
ஸ்ரீ ரங்கம் கோவிலை சுற்றி பார்த்து விட்டு வெளியே வரும்பொழுது மணி 1.30 பசி வயிற்றை கிள்ளியது.ரங்கநாதர் சந்நிதி தெருவில் வெங்கடேச பவன் என்ற சைவ உணவகம் இருப்பதாக எங்கோ படித்த நியாபகத்தில் அதை தேடி அலைந்தோம். ஏறக்குறைய அரைமணி நேர அலைச்சலுக்கு பின் இடத்தை கண்டறிந்தோம் (பக்கத்திலேதான் இருந்தது). ஆனால், கொரோனாவின் பிடியில் சிக்கிய சிறு உணவகங்களின் பட்டியலில் வெங்கடேச பவனும் இருந்தது. பூட்டிய கதவை பார்த்துவிட்டு திரும்பினோம். தஞ்சை செல்லும்வழியில் A2Bயில் ஒரு பிடி பிடித்தனர் (நான் வெறும் தயிர் சாதம் தான். 2 நாளாக உடம்பு சரி இல்லை).
ஸ்ரீ ரங்கத்திலிருந்து கிளம்பி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரம் செல்ல திட்டமிட்டோம். இந்த கோவிலுக்கு போக முடிவெடுக்க காரணம் இருந்தது. ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு முன், அலுவல் ரீதியாக ஸ்ரீ ரங்கம் வந்தபொழுது, என்னுடன் வேலை செய்யும் சகா இந்த கோவிலை பற்றி இவ்வாறு சொன்னார் "அங்கு பிரம்மா நினைத்தால் மட்டுமே போகமுடியும். நாமாக போக முடியாது...". அந்த முறை போக முடியவில்லை. அதன் பிறகும் 2-3 முறை முயன்றும் பயணம் கைகூடவில்லை. அதனால் இப்பொழுது போகலாம் என்று (அப்படி என்னதான் அந்த கோவிலில் விசேஷம் என்று பார்க்க) முடிவு செய்தோம். ஆனால், அங்கு நடை சாற்ற பட்டிருக்கும் என்று தெரிந்ததால் நேராக தஞ்சாவூர் சென்றோம். இந்த முறையும் தோல்விதான் 😣.
(சில நாள்கள் முன்புதான் அங்கு சென்று வந்தேன் என்பது தனி கதை 😊)
புறநகர் சாலையில் தஞ்சை தமிழ் பல்கலை. யை பார்த்த பொழுது, நொடி பொழுதில் அந்த பல்கலையின் முக்கியத்துவமும், அதன் முதல் துணை வேந்தர் V.I. சுப்ரமணியம் அவர்களின் அரசுடனான போராட்டமும், பதவி ஏற்கும் முன்பே ராஜினாமா கடிதத்தை சக ஊழியர்களிடம் கொடுத்த நேர்மையும் கண்முன் வந்து போனது.
சோழர்களின் தலைநகரான தஞ்சைக்கு நினைவு தெரிந்து இப்பொழுதுதான் முதல் முறை செல்கிறேன். நகரத்துக்குள் நெருக்கடி இருந்தாலும் பழமை மாறாமல் இருந்தது. என் நண்பர்களுக்கு தெரியும், நான் ஒரு பழமை விரும்பி என்று, அதனால் அந்த காட்சிகள் எனக்கு மன கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
அங்கு நாங்கள் சென்ற சமயம் கதிரவன் அஸ்தமிக்க ஆரம்பித்திருந்தான். ஹோட்டலில் செக்கின் ஆகி ( நாங்கள் அறையை புக் செய்த கலாட்டாவை வைத்து தனியாகவே ஒரு கதை எழுதலாம் 😂) சிறிது நேரம் ஓய்வெடுத்த உடன், மாலை வெயிலில் பெரிய கோவிலை பார்க்கவேண்டும் என்ற துடிப்பில், நண்பர்களை இழுத்துக்கொண்டு (ஆம், என் தேவைக்காகத்தான்) பெரிய கோவில் சென்றோம். சரியாக கதிரவன் தனது அந்திம கதிர்களை கோபுரத்தின் மீது படரவிட்டிருந்தான்.
பெரிய கோவிலை பற்றி பலர் புகழ்துள்ளதால் நான் அதன் சிறப்புகளை பேசி உங்களை நோகடிக்க விரும்பவில்லை. உள்ளே சென்றதிலிருந்து வெளிய வரும்வரை நால்வர் மட்டுமே என் மனக்கண் முன்னால் நின்றனர். அவர்கள்: கருவூரார், ஆதித்ய கரிகாலன், குந்தவை பிராட்டியார், அருள்மொழி வர்மன் (எ) ராஜ ராஜ சோழன்.
ஒருவேளை ஆதித்ய கரிகாலன் அரியணை ஏறி இருப்பானே ஆனால், இந்த கோவில் இருந்துருக்காது. யார் கண்டது, இதை விடவும் பிரமாண்டமாய் வேறொரு திருக்கோவிலை கட்டியிருப்பான். விதி அவனை அழைத்துக்கொண்டது. கருவூராரின் சாபமும் மனதில் வந்து போனது.
இரவு உணவை எடுத்துக்கொண்டு ரூமிற்கு சென்றோம், அடுத்த நாளின் தீவிர சரித்திர தேடலுக்காக சீக்கிரமே உறங்கிபோனேன்.
(இடையில் என்னுடைய அலுவல்களும் இருந்தன! கையேடு மடிக்கணினியையும் எடுத்து போயிருந்தேன் 😉)
- தொடரும்
தினேஷ்
திருவள்ளுவர் ஆண்டு 2052 ஆனி 10
நன்று...👍
ReplyDeleteNice travelogue...simple details....On center English vinglish interestng....keep on move....
Thanks :)
Delete