'பொன்னியின் செல்வன் பாதையில் இரண்டாம் நாளின் தொடர்ச்சி. முந்தைய பதிவை இங்கே படிக்கவும்.
கடம்பூர் மாளிகை சென்றதை கூறும் முன் அவ்விடத்தின் சிறப்பை எடுத்துரைத்தால் நல்லது என்பதால்...
வீரநாராயண ஏரி (எ) வீராணம் ஏரியில் ஆடி பதினெட்டாம் பெருக்கை மக்கள் விமர்சையாய் கொண்டாடுவதையும் அதன் பிறகு வீரநாராயண பெருமாள் கோவில் (எ) காட்டுமன்னார் கோவிலில் 'ஆழ்வார்க்கடியான் நம்பியை' சந்தித்தான் வந்தியத்தேவன். பராந்தக சோழனின் மகனும் பட்டது இளவரசனும் சோழ வடபுல சேனையின் தலைவனுமான ராஜாதித்ய சோழன் இங்கே முகாமிட்டபொழுது வீரர்கள் ஓய்வெடுத்து காலம் கடத்துவதைவிட மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கோடு கட்டப்பட்டதே இந்த ஏரி. பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனின் பயணமும் இந்த இடத்திலிருந்தே தொடங்கியது. ஏரி கட்டிமுடிக்கப்பட்ட பின் நீரின் தெய்வமான பெருமாளுக்கு கோவில் எழுப்பியிருந்தான் இளவரசன். ராஜாதித்ய சோழன் தக்கோலம் போரில் வீர மரணம் எய்தினான். ஆகையால் யானைமேல் துஞ்சிய தேவன் எனும் பட்டம் பெற்றான் என்பது கொசுறு தகவல்.
காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலனின் ஓலையை தஞ்சைக்கு எடுத்துப்போகும் வழியில் தனது நீண்ட நாள் நண்பனான கந்தமாறனை சந்திக்கத்தான் முதல்முறை வீராணம் எரிக்கரையிலிருந்து கடம்பூர் மாளிகை சென்றான் வந்தியத்தேவன். பின்னாளில் இதே மாளிகை தனது நெருங்கிய நண்பனின் உயிரை குடிக்கும் என்பதும் அதன் பழி தன் மீதே விழுமென்பதையும் அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து பலசிற்றூர்கள் வழியாக பயணித்தோம். ஆயிரமாண்டுகளுக்கு முன்பு சோழர்களின் தலைநகராக இருந்ததற்கான எந்த வரலாற்று எச்சங்களும் இல்லாமல் மிகவும் பின்தங்கிய, நவ நாகரீகம் தனது முத்திரையை அழுத்தமாக இவ்விடங்களில் பதிக்கவில்லை என்பதை பயணத்தில் கண்கூடாக கண்டறிந்தோம்.
குறுகலான சாலையின் வழியே ஏறக்குறைய 10 கி.மீ. பயணித்தபின்பு வடவாறு கரையை எட்டிப்பிடித்திருந்தோம். வீராணம் ஏரியின் முக்கிய நீர் ஆதாரமாகவும், பொன்னியின் செல்வனில் பல முக்கிய நிகழ்வின் சாட்சியமாகவும் வடவாறு எங்களை வரவேற்றது.
பிரமாண்ட லாரிகளும் தங்கள் முதுகில் நெற்களஞ்சியங்களை சுமந்து ஊர்ந்து சென்றுகொண்டிருந்தன. சாலை மோசமாக இருந்தாலும் இப்படிப்பட்ட கண்கொள்ளா காட்சியை ரசிக்காமல் இருக்கத்தான் முடியுமா?
இறுதியாக கடம்பூரை அடைந்தோம். மேல கடம்பூர், கீழ கடம்பூர் என இரண்டாக தற்போது பிரிந்திருக்கிறது. கடம்பூர் மாளிகை இருந்ததற்கான ஆதாரங்கள் தற்போது எதுவும் இல்லை. கல்கி கடம்பூரை மிக பிரமாண்டமான, செல்வ செழிப்பான ஊராக உருவகப்படுத்தியிருப்பார். ஆனால், தற்பொழுதோ மொத்தமே 10-15 தெருக்களுடன் மிகவும் பின்தங்கிய கிராமமாகவே காட்சியளித்தது.
கல்கியின் வாசகர்கள் பலர் வந்தியத்தேவனின் பாதையில் பயணித்து குறிப்புகளை எழுதியுள்ளனர். அதன் அடிப்படையிலும், கூகிள் மேப் காட்டிய இடத்தின் அடிப்படையிலும் மாளிகை 'பெரிய மேடு' என்னும் பகுதியில் அமைந்திருப்பதை கணிக்கமுடிந்தது. அவ்விடம் தற்போது வயல்வெளியாக உள்ளது. பெரிய மேட்டுக்கு ஒருபுறம் வடவாறும், மறுபுறம் கோவிலும் இருந்ததால் அதுவே மாளிகை இருந்த இடம் என முடிவுசெய்யவேண்டியிருந்தது. அவ்விடத்தை காணும்போது காதினுள், சதி ஆலோசனை நடைபெற்ற சமயம் (முதல் முதலில் வந்தியத்தேவன் கடம்பூர் சென்ற நாள்) மாளிகையில் நடைபெற்ற, 'குரவை கூத்து' ரீங்காரமிட்டது.
ரூமிற்கு செல்லும்வழியில் மராட்டிய அரண்மனை, புகழ்பெற்ற சரஸ்வதி நூலகம் ஆகியவற்றை (கதவு சாத்தப்படும்முன்) கண்டோம்.
பயண திட்டம் கைகூடாத நாள். தனிப்பட்ட காரணங்களுக்காக மாலைக்குள் வீடு திரும்பவேண்டியிருந்தது. வீரநாராயண ஏரி (எ) வீராணம் ஏரி, வீரநாராயணப்பெருமாள் கோவில் (எ) காட்டுமன்னார் கோவில், சோழர்களின் பழைய தலைநகரான 'பழையாறு' ஆகியவை பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலிலேயே தங்கிவிட்டது.
இரண்டாம் கட்ட பயணத்தை தொடங்க எண்ணியபோது கொரோனா தனது இரண்டாம் கட்ட பயணத்தை தொடங்கிவிட்டிருந்தது. கூடிய விரைவில் அடுத்த கட்ட பயணத்தை தொடங்கவேண்டும்.
வரலாற்று புதினங்களில் வரும் இடங்களை தேடிச்சென்று பார்ப்பது இதுவே முதல்முறை. ஆகையால், திட்டமிடலில் சில தவறுகள் இருந்தன. அடுத்தமுறை அதை நிவர்த்திசெய்து பெரும்பாலான இடங்களை பார்ப்பேன் என்றும் அதை உங்களுடன் பகிர்வேன் என்றும் நம்புகிறேன்.
-முற்றும்-
தினேஷ்
திருவள்ளுவர் ஆண்டு 2052 ஆனி 20
Comments
Post a Comment